தீபாவளி பண்டிகைக்காக விரைவு பேருந்துகளில் 7,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 7,000 பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2ஆம் தேதி பயணம் செய்ய 4,000 பேரும், 3ஆம் தேதி பயணம் செய்ய 3,000 பேரும் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.
கடந்த காலங்களை போல கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட சில இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். ஆனாலும் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது உண்டு. இதற்காக பலர் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிலர் சிறப்பு ரெயில்கள் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு பேருந்துகளும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், குளிர்சாதன பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மொத்தம் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,506 சிறப்பு பேருந்துகள் என்று மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9,806 பேருந்துகளும், மற்ற ஊர்களிலிருந்து 6,734 பேருந்துகளும் இயக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
**-ராஜ்**
.
�,