தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மீண்டும் தொடங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக கீழமை நீதிமன்றங்கள் அனைத்திலும் வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகிற நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருகிற 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தலாம். குறைந்தபட்ச வழக்குகளோடு விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் மற்றும் கால நிர்ணயம் செய்யப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை சாட்சிகளை விசாரணை செய்யக் கூடாது. நீதிமன்றத்துக்கு வரக்கூடிய வழக்கறிஞர்கள் அவர்கள் ஆஜராகக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமே வர வேண்டும். தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.
நீதிமன்ற ஊழியர்கள் 75 சதவிகிதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, நீதிமன்றங்களைத் திறப்பது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் விசாரிக்கப்படும். திங்கள்கிழமை முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,