கொரோனாவை விட கொடிய நோய்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Balaji

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் மனித குலத்துக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 86 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.8 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இப்போதுதான் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்களிடம் செலுத்தும் ஆரம்பக் கட்ட பணி தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் மனிதர்களிடம் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தத்தைச் சந்தித்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே உலக நாடுகள் கொரோனாவை விட மோசமான ஆபத்துக்குத் தயாராக வேண்டும். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால பிரிவு தலைவர் மைக் ராயன் கடந்த மாத இறுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று மனிதக் குலத்தைத் தாக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எபோலா வைரசை கண்டறிய உதவிய ஜீன்-ஜாக் முயெம்பே தம்ஃபூன், “மனிதக்குலம் தற்போது ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நோய் ஏற்கனவே ஆப்பிரிக்க வெப்பமண்டல மலைக்காடுகளில் உருவாகியது” என்று கூறியுள்ளார்.

CNN ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த புதிய நோய் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த அவர், விலங்குகளிலிருந்து மனிதனிடத்தில் பரவும் வைரஸ்கள், நுண் கிருமிகளும் அதிகரிக்கும்” என்றும் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டி.ஆர்.சி) ஒரு பெண்ணுக்கு டிசீஸ் எக்ஸ் கண்டறியப்பட்டது. அவருக்கு முதலில் எபோலா வைரசுக்கான அறிகுறி இருந்தது. ஆனால் அவரை பரிசோதித்ததில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. ஆனால், அவர் கொரோனாவை விட வேகமாகப் பரவுகின்ற, எபோலாவின் தன்மையுடைய, 50 முதல் 90 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட, எக்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தன. அவரிடம் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நோய்க்கான காரணம் என்ன என்பது இன்னும் அறியமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிசீஸ் எக்ஸ் என்பது உலகெங்கிலும் பரவக்கூடும் என அஞ்சப்படும் ஒரு தீவிர நோய் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

“காடுகளை அழிப்பதால் வன விலங்குகள், பறவைகள் இருக்குமிடங்களை இழந்து மனிதர்கள் வாழும் இடங்களை நோக்கி வருகின்றன. எலிகள், வௌவால்கள் போன்ற விலங்குகள் வரும் போது மனிதர்களுக்கு அவற்றிடமிருந்து நோய் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது” என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் நோய், அது எந்த கிருமியால் பரவுகிறது? அதன் தாக்கம் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியவராத நிலையில், அதற்கு டிசீஸ் எக்ஸ் என பெயரிடப்படுவது வழக்கம். தொடர்ந்து அது, எப்படிப் பரவுகிறது என்பது உறுதியான பிறகு, அதற்கு புதிய பெயர் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share