சென்னையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், நோய் கட்டுப்பாட்டு பகுதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,55,121ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில், 1,373 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 1269 தெருக்களில் ஒருவருக்கும், 74 தெருக்களில் 2 பேருக்கும், 20 தெருக்களில் 3 பேருக்கும், 10 தெருக்களில் 3க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கொரோனா பராமரிப்பு மையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருவில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அந்த பகுதி கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அப்பகுதி உரிய தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்தப்படும். அதனால், சென்னை மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35,000 ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
**வினிதா**
�,