வரலாற்றுப் படமான மாமாங்கம் டப்பிங் பணிகளில் நாயகன் மம்முட்டிக்கு, இயக்குநர் ராம் செந்தமிழில் பேசுவதற்கு உதவிபுரிந்த சுவாரஸ்யமான செய்தி வெளியாகியிருக்கிறது.
1695ஆம் ஆண்டை பின்புலமாகக்கொண்டு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளாவின் பாரதப்புழா நதிக்கரையில் கொண்டாடப்படும் இந்து சமயத் திருவிழாவை மையப்படுத்தி, வரலாற்றுப் புனைவாக உருவாகிவரும் படம் மாமாங்கம். இந்தப் படத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். அண்மையில் வெளியான படத்தின் டீஸர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளிலும் வெளியிடவுள்ளார்கள். தமிழில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் ராம் வசனங்களை எழுதியுள்ளார். ராம் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வெளியான பேரன்பு படத்தின் நட்பு காரணமாக, ராம் இதில் பணியாற்றியிருக்கிறார். மேலும், படத்தின் தமிழ் டப்பிங்கிலும் மம்முட்டி உடனிருந்து வசன உச்சரிப்புகளில் உதவியிருக்கிறார்.
வரலாற்றுப் படமென்பதால் இதில் நடித்த மம்முட்டி, செந்தமிழின் சரியான மொழியியல் பண்புகளைத் தழுவி தமிழில் டப்பிங் செய்திருக்கிறார். இது படக்குழுவில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து இயக்குநர் பத்மகுமார் கூறுகையில், “மம்முட்டி பண்டைய தமிழின் சரியான உச்சரிப்பைப் பெறுவதற்காக நிறைய ஒத்திகைகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டார். இந்தப் பணிக்காக, உடனிருந்து பக்கபலமாகச் செயல்பட்டதற்கும், படத்தில் தமிழ் வசனங்களை எழுதியதற்கும் இயக்குநர் ராம் அவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் மம்முட்டி, உன்னிமுகுந்தன், அச்சுதன், சித்திக், மணிகுட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிராச்சி தெஹ்லான், கனிஹா, அனு சித்தாரா, இனியா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
�,”