தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையேயான தொடர்பினை மேம்படுத்தவும், வாரியத்தின் பணிகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்தவும் நேரடி கலந்தாய்வு அமர்வு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தனிநபர், தொழிற்சாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுநல சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் தெரிவிக்கவும் இந்த அமர்வில் பங்கேற்று வாரிய அதிகாரிகளைச் சந்திக்கலாம்.
இந்த நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அல்லது அன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தால் அதற்கு அடுத்த வேலை நாளில் அனைத்து மாவட்ட அலுவலகங்கள், அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகங்களில் நடைபெறும்.
வாரியத்தின் எந்த அலுவலகத்திலும் எந்தவொரு நபரும் முன் தகவல், அனுமதியும் இல்லாமல் இந்த அமர்வில் பங்கேற்கலாம். இதற்காக www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் ‘OPEN HOUSE’ என்ற இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**- ராஜ்-**
.