பிப்ரவரி 7 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை!

public

தமிழ்நாட்டில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கேற்ப, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி மற்றும் காணொலி வாயிலாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியிலிருந்து தமிழ்நாடில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதனால் ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நீதிமன்றங்களில் காணொலி வாயிலாக மட்டும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.

தற்போது தினசரி கொரோனா பரவல் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வந்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படும். நேரடி மற்றும் காணொலி என இரண்டு வழியாகவும் விசாரணை நடைபெறும். வழக்கின்போது ஒருதரப்பினர் நேரடியாகவும், மற்றொரு தரப்பினர் காணொலி வாயிலாகவும் பங்கேற்கும் சூழல் உருவானால் அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி வாதாடும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருப்பது கட்டாயம். வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் அறைகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், நீதிமன்ற வளாகத்தில் உணவகம், நூலகம் ஆகியவை திறக்க அனுமதியில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *