பாலியல் புகாரில் திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே பழனி சாலையில் முத்தனம்பட்டி அடுத்த மல்லனம்பட்டியில் ஒரே வளாகத்தில் சுரபி என்ற பெயரில் தனியார் கேட்டரிங் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி விருதுநகர், மதுரை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கும் விடுதியில் இருந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் மீது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ”சுரபி கல்லூரியில் கடந்த 13 ஆம் தேதி குழந்தை திருமண தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்திய அலங்கார உடைகளை தாளாளர் ஜோதி முருகனிடம் ஒப்படைக்க சென்றேன். அப்போது என்னுடன் வந்த மாணவிகள் 2 பேரையும் வெளியே செல்லுமாறு கூறிவிட்டு என்னை மட்டும் அவரது அறையின் உள்ளே இருக்குமாறு கூறினார். அதன் பின்னர் அவர் எனது உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆடைகளை கழற்றவும் முயற்சி செய்தார். எப்படியோ அவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துவிட்டேன். இதுகுறித்து சக மாணவிகளிடம் கூறியபோதுதான் என்னை போன்று பலரும் தாளாளரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து விடுதி வார்டன் அர்ச்சனாவிடம் புகார் செய்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தாளாளர் ஜோதிமுருகனுக்கு உடந்தையாக இருந்து வருகிறார். அதனால், அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி வார்டன் அர்ச்சனா ஆகிய இரண்டு பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு தெரியவந்ததையடுத்து, முத்தனம்பட்டி ரயில் ரோடு அருகே நேற்று(நவம்பர் 19) காலை மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், தாளாளரையும், விடுதி வார்டனையும் கைது செய்ய வேண்டும் என்றும் மாணவிகள் கோஷமிட்டனர். போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரையும் கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து நேற்று மாலை வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். விரைவில் கல்லூரி தாளாளரும் கைது செய்யப்படுவார் என்று போலீசார் அளித்த வாக்குறுதியை நம்பி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், திண்டுக்கல் அருகேயுள்ள நர்சிங் கல்லூரியின் அறைகளுக்கு சரக டிஐஜி விஜயகுமார் தலைமையிலான குழு சீல் வைத்தது. மேலும் தலைமறைவாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை போலீஸ் தேடிவருகிறது.
**-வினிதா**
�,”