சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு எந்த போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. போட்டிக்குப் பிறகு இருமாதங்கள் ஓய்வு எடுப்பதாக அறிவித்த அவர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் வரை அவர் தனது விடுமுறையை நீடித்துள்ளார். இதன் காரணமாக ஜய் ஹசாரே கோப்பை, வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளில் தோனி பங்கேற்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோனி பங்கேற்பார் என்றும் இதற்காக அவர் தன்னை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜார்கண்டில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் ஜார்கண்ட் யு-23 அணி வீரர்களுடன் தோனி பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் அக்டோபர் 31 முதல் தேசிய அளவிலான யு-23 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் அதற்கான தீவிர பயிற்சியில் ஜார்கண்ட் வீரர்கள் ஈடுபட உள்ளார்கள். அவர்களுடன் தோனி பயிற்சியில் ஈடுபடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தோனி ஓய்வை அறிவித்ததன் பின்னர் அவரது இடத்தை ரிஷப் பந்த் நிரப்புவார் என்பதாக பலரும் கூறி வந்தனர். ஆனால் எதிர்பார்த்ததைப் போன்று ரிஷப் பந்தால் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதனால் இவருக்குத் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் தோனி-ரிஷப் பந்த் ஒப்பீடு குறித்து “ரிஷப் பந்த்தை தோனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமற்றது, தோனி, தோனி ஆவதற்கு நிறைய ஆண்டுகள் பிடித்தன, தோனிக்கு நெருக்கமாகச் செல்ல ரிஷப் பந்த்துக்கும் நிறைய காலம் பிடிக்கும்.தோனிக்கு மாற்று வீரரைக் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரிஷப் பந்த் வெளியிட்டுள்ளார். தோனியின் செல்ல நாயுடன் அவர்கள் இருக்கும் அந்த புகைப்படத்தில் ‘குட் வைப்ஸ் ஒன்லி’ என்ற வாசகத்தையும் அவர் சேர்த்துள்ளார். இந்த புகைப்படம் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.�,”