ஆந்திர மாநிலத்தில் பணியிலிருந்த தனது டிஎஸ்பி மகளுக்கு மகிழ்ச்சியுடன் அவரது தந்தை சல்யூட் அடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராக ஷாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜெசி பிரசாந்தி. ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று 2018ஆம் ஆண்டு முதல் குண்டூர் டவுன் பகுதியில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிறு அன்று திருப்பதியில் காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஜெசி பிரசாந்தி சீருடையில் வந்திருந்தார். அப்போது காவல்துறை உயரதிகாரிகளை சல்யூட் அடித்து வரவேற்றுக் கொண்டிருந்தார் ஷாம் சுந்தர். தனது டிஎஸ்பி மகளான பிரசாந்த்திக்கும் சல்யூட் அடித்து கண்ணீர் மல்க மனதில் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.
பெருமைக்குரிய இந்த சம்பவம் தொடர்பான புகைப்படத்தை ஆந்திர மாநில காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தனது தந்தை சல்யூட் செய்தது குறித்து பிரசாந்தி கூறுகையில், நாங்கள் பணியில் இருக்கும்போது சந்தித்துக் கொண்டது இதுவே முதன்முறை. எனக்கு சல்யூட் அடிக்க வேண்டாம் என்று தந்தையிடம் கூறினேன். எல்லாவற்றிற்கும் மேல் அவர் எனக்குத் தந்தை என்பதால் அவர் சல்யூட் அடித்தது சற்று அசவுகரியமாக இருந்தது. இதையடுத்து மீண்டும் நான் அவருக்கு சல்யூட் அடித்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “என் தந்தைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். அவர் இடைவிடாமல் மக்களுக்குச் சேவை செய்வதைப் பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன். தன்னால் முடிந்தவரை அவர் பலருக்கு உதவி செய்திருக்கிறார். இதுதான் இந்தத் துறையைத் தேர்வு செய்ய எனக்கு ஊக்கமளித்தது” என்று கூறியுள்ளார் டிஎஸ்பி பிரசாந்தி.
**2014**
2014 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தெலங்கானாவின் ஜக்தியால் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சிந்து சர்மாவுக்கு அவருடைய தந்தை முன்னாள் காவல் துணை ஆணையர் உமா மகேஸ்வர சர்மா, டிஆர்எஸ் கட்சியால் ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சந்தித்தபோது சல்யூட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**�,”