நாகை மாவட்ட மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள தர்மபுரம் ஆதீனம் சார்பில் ஆண்டுதோறும் ஒருவருக்கு தமிழ் அறிஞர் விருது, கடந்த 75 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் டெல்டா எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் அறிவித்துள்ளார். வரும் மே 7ஆம் தேதி தருமபுரத்தில் பிரமாண்டமாக நடைபெறும் குடமுழுக்கு உற்சவத்தின்போது ‘அறிஞர் விருது’ கோமல் அன்பரசனுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தமிழறிஞரான ரா.பி.சேதுப்பிள்ளைக்கு தருமபுரம் ஆதீனம் ‘சொல்லின் செல்வர்’ விருது வழங்கியது. அப்போது தொடங்கி இப்போது வரை ஆண்டுக்கு ஓர் அறிஞர் என்ற ஆதீனத்தின் தமிழ் சேவை தொடர்கிறது.
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையின் சார்பில், கோமல் அன்பரசன் எழுதிய நூல்களின் ஆய்வரங்கம் ‘அன்பெழுத்து’ என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தர்மபுரம் ஆதீனம், “மயிலாடுதுறை தனி மாவட்ட போராட்டத்துக்கு வித்திட்டவர் கோமல் அன்பரசன். மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமைந்தால் அப்பெருமை அன்பரசனையே சாரும்” என்று பேசினார்.
21 நூல்களை எழுதியுள்ள கோமல் அன்பரசன், சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருபவர். டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் இயங்கும் ‘காவிரி’ அமைப்பின் தலைவர். அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறைகளில் இளம் வயதிலேயே உயர் பொறுப்புகளை வகித்த கோமல் அன்பரசன், நவீன தமிழ்ச் சொற்களை ஊடகப்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர். தற்போது தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களின் தவிர்க்க முடியாத வார்த்தைகளான, நேரலை, அண்மைச் செய்தி போன்ற பல சொற்களை உருவாக்கித் தந்தவர் இவர்.
**-வேந்தன்**�,