கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியான அசுரன் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் சமூக வலைதளங்களில் விவாதக் களமாக மாறியது. இந்நிலையில், தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான அசுரன், 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் 100 கோடி கிளப்பில் இணையும் முதல் படம் அசுரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் அசுரன் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக ஸ்ரீதர் பிள்ளை, பிரஷாந்த் ரங்கசாமி, ரமேஷ் பாலா உள்ளிட்ட திரைப்பட விமர்சகர்களும், பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அசுரன் படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அசுரனின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த தகவல்கள் அறிந்ததும் இந்த வெற்றியை பெரியளவில் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
2002 ஆம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து 17 வருடங்களாக பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் 100 கோடி கிளப்பில் இதுவரை அவரது படங்கள் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, அசுரனின் வெற்றி அதை சாத்தியமாக்கியிருக்கிறது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அசுரன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
�,