தமிழக காவல் துறையில் உயர் அதிகாரிகள் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை அனைவரது மத்தியிலும், ‘வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு கொடுத்துட்டீங்களா?;’என்பதே தற்போது பேச்சாக இருக்கிறது.
ஜனவரி 5ஆம் தேதி, மாலை காவல்துறையில் உள்ள அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில் அந்தந்த டிஎஸ்பி, ஏசி அலுவலக எல்லைக்குட்பட்ட காவலர்கள், அவர்களின் வாக்காளர் ஐடி, பான் கார்டு, ஆதார் ஐடி ஆகிய மூன்றையும் அவசரமாக வாட்ஸ் அப் மூலம் அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.
இவற்றை ஒரு மணி நேரத்தில் சேகரித்த டிஎஸ்பி மற்றும் ஏசி அலுவலகம், அந்தந்த மாவட்ட எஸ்.பி, மற்றும் டிசி அலுவலகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் மொத்தமாகச் சேகரித்து டிஜிபி தலைமை அலுவலகத்துக்கு அன்று இரவுக்குள்ளே அனுப்பியிருக்கின்றனர்.
”ஆதார் ஐடி, பான் கார்டு கேட்குறது கூட ஒரு வகையில் ஒ.கே. ஆனா, வாக்காளர் ஐடி ஏன் கேட்கிறாங்க?” என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ;போலீசார்.
இதுகுறித்து சில அதிகாரிகளைக் கேட்டால், “காவல்துறையினர் மக்களோடு நெருக்கமாக இருந்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் பல ஆயிரம் போலீசார் பாதிக்கப்பட்டனர். சிலர் உயிர் இழந்துள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்றும், புதிய வைரசும் பரவாமலிருக்கத் தடுப்பூசி போடுவதற்குத்தான் அடையாள அட்டைகளைக் கேட்டுள்ளோம்” என்கின்றனர்.
கொரோனா தடுப்பூசிக்கும் வாக்காளர் அடையாள அட்டைக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் தொப்பியைக் கழற்றிவைத்துவிட்டு தலையைச் சொரிந்துகொள்ளும் போலீஸாரின் சந்தேகம்.
**-வணங்காமுடி**�,