அரசு சிறப்பு விடுமுறை தனியாருக்குப் பொருந்துமா?

Published On:

| By Balaji

அரசு சார்பில் அளிக்கப்படும் சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 18) தெரிவித்துள்ளது.

2015ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழக அரசு மாற்று முறை ஆவண சட்டப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் தொழிற்சாலையான பி மெட்டல் பியரிங்கிஸ் தனது தொழிற்சாலையில் முதல் மற்றும் பொது ஷிப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. ஆனால் மதியம் மற்றும் இரவு ஷிப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வில்லை. இந்த ஷிப்ட்களில் பணியாற்றுபவர்கள் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதனை ஏற்க அந்த தொழிற்சாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. ஜூலை 30ஆம் தேதி விடுமுறை வேண்டுமென்றால், அரசு விடுமுறையான ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துவிட்டது. இதை ஏற்காத ஊழியர்கள் ஜூலை 30ஆம் தேதி விடுமுறை எடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ஊதியம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், விடுமுறை எடுத்த 47 ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (அக்டோபர் 18) விசாரணைக்கு வந்தது.

அப்போது மாற்று முறை ஆவண சட்டப்படி அரசு அளிக்கும் சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், நிபந்தனையுடன் அந்த நிறுவனம் விடுமுறை அளிக்க முன் வந்தபோதும், அதை ஏற்காத ஊழியர்களுக்கு அன்றைய தினத்துக்கான ஊதியத்தைப் பெற உரிமையில்லை என்றும் தெரிவித்து சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share