இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை பணியாற்றும் வகையில், நிரந்தர ஆணையத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று 2010ல் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், எஸ்.எஸ்.சி எனப்படும் சார்ட் சர்வீஸ் கமிஷனின் கீழ் ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்குவதற்கான உத்தரவை அமல்படுத்த ஒரு மாதம் கெடு விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ராணுவத்தில் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகள் அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்றும் வகையில், நிரந்தர ஆணையம் அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ராணுவ விமானப் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப் போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியாளர்கள் , ராணுவச் சேவைப்படை, ராணுவ தளவாடப்படை மற்றும் புலனறிவுப்படை ஆகிய பிரிவுகளோடு நீதிபதி, அட்வகேட் ஜெனரல் மற்றும் ராணுவக் கல்வி ஆகிய பிரிவுகளிலும் இனி பெண்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய கால பணியில் உள்ள அனைத்து பெண் அதிகாரிகளும் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம் என்ற தங்கள் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, தேவைப்படும் ஆவணங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த உடனேயே நிரந்தர பணி தேர்வு வாரியத்தின் கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக குறுகிய கால பணி அடிப்படையில் ராணுவத்தில் பெண்கள், 5 ஆண்டுகாலம் வரை மட்டுமே பணியாற்ற முடியும். இது 14 ஆண்டுகாலமாக நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதின் மூலம் ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் பணியாற்றவும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
**-கவிபிரியா**
�,