செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் நடன அசைவுகள் மூலம் மாணவர்களுக்கு தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்தது மாணவர்களுக்கு சந்தோஷம் என்றாலும், இடைவெளி காரணமாக கற்றல் மீதான ஆர்வம் குறைந்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், மாணவர்களுக்குப் பிடித்தவண்ணம் வகுப்புகளை எடுத்து சென்றால் மட்டுமே மீண்டும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல், பாடம் நடத்தும் ஆசிரியரின் புதுப்புது யுக்திகள் மட்டுமே மாணவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும். அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் நான்கு வாரங்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களை கவரும் வகையில் பல்வேறு ஆசிரியர்கள் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு பாடம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் கவிதா.
மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கவும், எளிதில் மனதில் பதிய வைக்கும் வகையிலும் சினிமா பாடலான ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் மெட்டுக்கு ஏற்றாற்போல், பாடியும், நடனமாடியும் ‘க,ங,ச,ஞ…’ தமிழ் எழுத்துகளைக் கற்று தருகிறார்.
பரதநாட்டியம் அசைவுகள் மூலம் சில எழுத்துகளை கற்றுக் கொடுக்கிறார். அடுத்து, சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடல் மெட்டிலும் எழுத்துகளை கூறி பாடம் நடத்துகிறார். மாணவர்களும் ஆசிரியை கவிதா போன்று பாடியும், நடனமாடியும் தமிழ் எழுத்துகளை ஆர்வமுடன் கற்றுக்கொள்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஆசிரியையின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
**-வினிதா**
�,