ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் சந்திப்பின்போது அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றம்செய்தார். தொடர்ச்சியாக நிர்வாகிகள் நியமனம், சின்னம் என அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஒப்புக்கொண்டுள்ள திரைப்படங்களை முடித்துக்கொடுத்த பிறகு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று அவருக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து கூறும் தமிழருவி மணியன் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியைத் துவங்குகிறார் என்றால் அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு பாராட்டும் தெரிவிக்கிறேன். ஆனால், ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனை நான் இப்போது தெரிவிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்றுதான் சொல்லிவருகிறேன். தமிழகத்தில் யாராக இருந்தாலும் பாஜகவில் இணைய வேண்டும் என்றுதான் நான் கூறுவேன்” என்று தெரிவித்தார். ரஜினிகாந்தை பாஜகவில் இணைப்பதற்காக முயற்சிகளில் ஈடுபடவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
ரஜினிகாந்தை பொறுத்தவரை பாஜகவுடன் இணக்கமாகவே இருந்துவருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியை பலசாலி என்று மறைமுகமாகப் பாராட்டியிருந்த ரஜினிகாந்த், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த நதிகள் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களை வரவேற்றிருந்தார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் நடவடிக்கைகளை பாராட்டி அவர்களை அர்ஜுனர், கிருஷ்ணர் என்றும் ரஜினிகாந்த் புகழ்ந்திருந்தார்.
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றோர் அரசியலுக்கு வரமாட்டர்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், “ரஜினி கட்சி தொடங்குவது குறித்த கே.எஸ்.அழகிரியின் கருத்தை பயனற்றதாக கருதுகிறேன். ரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் என்பது கிடையாது” என்று விமர்சித்துள்ளார்.�,