திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவால் பேராசிரியர் க.அன்பழகன் இன்று காலமானார். கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பேராசிரியரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 7) மதியம் 3 மணியளவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அன்பழகனின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக அதிமுக சார்பில் , பேராசிரியர் க.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ”திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும், கொண்டிருந்தவரும், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் இணைந்து அரசியலில் பயணித்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.
தமிழ்ப் பற்றும், தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் கல்லூரிப் பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மக்களாட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவராவார். பேராசிரியர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சராகவும், உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில், அவரது தமிழ்ப் புலமையையும், பெருந்தன்மையான உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்பையும் கண்டு வியந்திருக்கிறோம். 75 ஆண்டுகள் பொது வாழ்வில் பங்குபெற்று அயராது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியரின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்” என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்,
நாகப்பட்டினத்தில் இன்று மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், பேராசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாகை பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
**-கவிபிரியா**�,