அமெரிக்கா புறப்பட்ட பன்னீர்: முழுப் பயண விவரம்!

Published On:

| By Balaji

துணை முதல்வர் பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

முதலீடுகளை கவருவதற்காக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் செப்டம்பர் 10ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டு நேற்று முன்தினம் அதிகாரபூர்வப் பயணத் திட்டம் வெளியானது.

அமெரிக்கப் பயணத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை சந்தித்த பன்னீர்செல்வம், அவருக்குப் பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து நேற்றிரவு பன்னீர்செல்வம் இல்லத்துக்கே நேரடியாகச் சென்ற முதல்வர், அமெரிக்கா செல்வதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (நவம்பர் 8) அதிகாலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணனும் சென்றுள்ளார்.

**சிகாகோ நிகழ்ச்சிகள்**

சிகாகோவில் தரையிறங்கும் துணை முதல்வர், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து 10ஆம் தேதி, American Mutli Ethinic Coalition Inc சார்பாக நடத்தப்படும் ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்-2019’ விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். விழாவில் பன்னீர்செல்வத்துக்கு ‘International Rising Star of the Year – Asia Award’ என்ற விருது வழங்கப்படுகிறது. 12ஆம் தேதி சிகாகோ நகர மேயர், இல்லினாய்ஸ் ஆளுநர் ஆகியோரைச் சந்திக்க இருக்கிறார். பின்னர் இந்திய – அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் தொழில்முனைவோர் சார்பில் நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கிலும் அவர் கலந்து கொள்கிறார்.

**வாஷிங்டன் நிகழ்ச்சிகள்**

சிகாகோ பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து 13ஆம் தேதி அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சிக்குச் செல்கிறார். அங்கு பன்னீர்செல்வத்துக்கு இந்திய – அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க பன்னாட்டு கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14ஆம் தேதி ஹூஸ்டன் நகருக்குச் செல்லும் அவர், அங்கு தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மேலும் முக்கிய தொழில்முனைவோர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து கலந்துரையாட இருக்கிறார். 15ஆம் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான எலெக்ட்ரானிக் டோனர் போர்டை தொடங்கிவைக்கிறார்.

16ஆம் தேதி நியூயார்க் செல்லும் துணை முதல்வர் அங்கு இந்திய – அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு 17ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 10 நாட்களுக்கு இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share