தற்போது, டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.
சென்னை, சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 174வது வார்டு மடுவின்கரை, பாரதி நகர், பாரதி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தை இன்று(அக்டோபர் 20) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” ரூ.30 லட்சம் செலவில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் இன்று திறக்கப்பட்டது. இன்னும் கூடுதலாக ரூ.2 லட்சம் செலவில் உபகரணங்கள் தேவை உள்ளது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் வாங்கி கொடுக்கப்படும்.
தற்போதைக்கு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 340 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் சென்று அங்கு தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றுவது, தினந்தோறும் கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது, உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.
அதுபோன்று, பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். எந்த நாடும் இதற்கு விதி விலக்கு அல்ல. இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் குறைந்து வந்த தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 68 சதவிகிதத்தினர் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றாலும் இது போதுமானதல்ல. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 வயதை கடந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 57 லட்சம் அளவுக்கு உள்ளனர். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி தடுப்பூசியின் முதல் தவணையை 70 சதவிகிதத்தினர் செலுத்தியிருக்க வேண்டும். நாம் 68% செலுத்தியுள்ளோம்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுதான் கவலையளிக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்திட வேண்டுமோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சனிக்கிழமை 50 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் மூலம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களை பயன்படுத்திக் கொண்டு மக்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,