டெல்டா மாவட்டங்களை மிரட்டும் வடகிழக்கு பருவமழை!

public

வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது . காற்றழுத்த தாழ்வு சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை சென்னை மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும். . இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக 29 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று(நவம்பர் 10) நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் கன மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டியில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் 29 செ.மீ. மழையும், வேதாரண்யத்தில் 25.2 செமீ, தலைஞாயிறு பகுதியில் 23.6 செமீ மழை பதிவாகி உள்ளது.தமிழ்நாட்டில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் 20 செமீட்டருக்கு அதிகமாகவும், 30க்கும் மேற்பட்ட இடங்களில் 10 செமீட்டருக்கு அதிகமாகவும் மழை பதிவாகி உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீர்ல் மூழ்கியுள்ளன. மழை நின்றால்தான் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியும். அதற்குள்ளாக பயிர்கள் அனைத்தும் அழுகிவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதுபோன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவிற்கும் உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கின்றன.

சென்னையில் கனமழை இல்லையென்றாலும், மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையினால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைநீர் இன்னும் வற்றாததால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். அதுமட்டுமில்லாமல், தண்ணீர் தேங்கி கிடப்பதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது..மழைநீருடன், கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்துள்ளது என்று சென்னை மக்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னையில் விரைவில் மழை தொடங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஒரு பகுதி மேகம் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இசிஆர், சிறுசேரி பகுதிகளில் முதலில் மழை தொடங்கும். அதன்பின் நகரின் மற்ற பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூரையொட்டி கரையைக் கடக்கின்ற நிலையில், புதுச்சேரிக்கு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சரியாக போக்குவரத்து இல்லாததால், காய்கறிகளின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. சில இடங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு காய்கறிகள் வராது என்று சில்லறை கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *