டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவு!

public

டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(பிப்ரவரி 26) உத்தரவிட்டுள்ளது. அதேசமயத்தில் 1984 வன்முறை போன்று மீண்டும் ஒரு வன்முறை ஏற்பட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற வன்முறையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பராநக்வி ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

இந்த மனு இன்று (பிப்ரவரி 26) நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது பாஜக தலைவர் கபில் மிஸ்ரா வெறுப்புணர்வுடன் பேசிய வீடியோவை பார்த்தீர்களா? என்று நீதிபதி முரளிதர் கேள்வி எழுப்பினார். காவல் துறை தரப்பில் மூன்று வீடியோக்களில் இரு காணொளியைப் பார்த்ததாகவும், கபில் மிஸ்ராவின் வீடியோவை பார்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, “உங்கள் அலுவலகத்தில் பல டிவிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் நிலையில் வீடியோவை பார்க்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும். டெல்லி காவல்துறையின் பதில் அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் நீதிபதி முரளிதர். பின்னர் நீதிமன்றத்திலேயே நீதிபதி உத்தரவின் பேரில் கபில் மிஸ்ரா பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் அந்த வீடியோ சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கும் போது, வெறுப்புணர்வுடன் பேசியவர்களுக்கு எதிராக ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வில்லை? என்று துஷார் மேத்தாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குத் தாமதமாவதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பொருத்தமான நேரம் வேண்டுமா? எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? நகரமே பற்றி எரிந்த பிறகு எப்.ஐ.ஆர் பதியப்படுமா? என அடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். அதன்படி பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, வடக்கு டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டோரை மத்திய மாநில அரசின் உயரதிகாரிகள் நேரில் சென்று பார்க்க வேண்டும். அப்போது தான் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

1984 சீக்கிய கலவரம் போல் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தெரிவித்த நீதிபதி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்களுடன் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கு குறித்து நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஜூபேடா பேகத்தை நியமிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி முழுமையாகச் சென்றடைய அவர் நடவடிக்கை எடுப்பார் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *