டெல்லி கலவரம்: டிரம்ப் விருந்தைத் தவிர்த்த அமித் ஷா

Published On:

| By Balaji

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தைக் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நடத்தியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 25) மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்காக நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் டெல்லி காவல் துறையைப் பொறுப்பில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் காணவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், சபாநாயகர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முதலில் இருந்தார்களே தவிர அங்கே அமித் ஷாவைக் காணவில்லை.

அமித் ஷா அங்கே விருந்தில் கலந்துகொண்டால், “ஏற்கனவே செயல்படாத உள்துறை அமைச்சர் என்ற விமர்சனம் மேலும் அதிகமாகும் என்பதால் தவிர்த்துவிட்டார்” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

இதற்கிடையேதான் டெல்லியின் தற்போதைய நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று பகல் டெல்லியில் நடந்தது. டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்த அமித் ஷா, நிலைமையைக் கட்டுப்படுத்த ஏதுவாக கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிகளும் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களுடனான டெல்லியின் எல்லைப்புறப் பகுதிகள், கடந்த மூன்று நாட்களாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி காவல் துறையினர் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப கூடுதல் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார். நிலைமையை மேலும் சீர்குலைக்கும் விதமாக, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது மற்றும் அறிக்கைகள் விடுவதைத் தவிர்க்குமாறும், அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தலைநகரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தன்னிச்சையாக நடைபெறுகின்றன, யாரும் தூண்டவில்லை என்றும் அமித் ஷா சுட்டிக்காட்டினார். மேலும், டெல்லி காவல் துறை மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார் அமித் ஷா.

பொதுமக்களிடையே அச்சத்தைத் தூண்டும் வகையிலான வதந்திகளைக் கட்டுப்படுத்த காவல் துறையினருடன் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பொதுமக்களும், ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதோடு, வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார். வதந்திகளைக் கட்டுப்படுத்த ஏதுவாக, காவல் கட்டுப்பாட்டு அறைகளில் காவல் துறை உயரதிகாரிகள் பணியிலிருப்பதை உறுதி செய்யுமாறு டெல்லி காவல் துறை ஆணையரிடம் அவர் அறிவுறுத்தினார்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த உள்ளூர் அமைதிக் குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமித் ஷா, இந்தக் குழுக்களில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினர், அனைத்து மதத்தினர் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைச் சேர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

பின் நேற்று இரவு டெல்லி கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியான சிறப்பு போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவத்ச்வா நியமிக்கப்பட்டார். நேற்று இரவு அவருடனும் மற்ற அதிகாரிகளுடன் அமித் ஷா சில மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின் நேற்று நள்ளிரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வடகிழக்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துக்கே சென்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இதற்குடையே ஜாமியா மில்லியா முன்னாள் மாணவர்கள் குழு, நேற்று இரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டுப் போராடியது. பின் அவர்கள் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

டெல்லியில் கண்டவுடன் சுட உத்தரவு என நேற்று இரவு தகவல் பரவியது. அப்படி எதுவும் இல்லை என்று டெல்லி போலீஸ் மறுத்துள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share