டெல்லி உயர் நீதிமன்ற வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு டெல்லி கலவரம் பற்றி நேற்று (பிப்ரவரி 25) நள்ளிரவில் நீதிபதியின் இல்லத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும், ஆதரிப்பவர்களுக்கும் இடையே மோதல், வன்முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் இருக்கும் முஸ்தபாபாத் பகுதியில் வன்முறையில் காயமடைந்தவர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக நோக்கி செல்லும் ஆம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடந்தன. இதையடுத்து ஆம்புலன்ஸுகளுக்கு பாதுகாப்பு கோரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சங்கம் நேற்று இரவு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆவணப் படத் தயாரிப்பாளர் ராகுல் ராயும் மனு செய்திருந்தார். முஸ்தாபாத் பகுதியிலிருந்து காயம்பட்டவர்களை வேறு பகுதி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக மாற்றவும், தரமான சிகிச்சைக்கான உத்தரவாதத்தையும் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
சூழலின் அவசரம் கருதி நீதிபதி எஸ்.முரளிதர் மற்றும் நீதிபதி ஏ ஜே பம்பானி ஆகியோர் நேற்று நள்ளிரவு இந்த மனுக்களை விசாரித்தனர்.
“சில குண்டர்கள் ஆம்புலன்ஸ்களை , பிரிஜ்புரி டி பாயிண்டிலிருந்து திரும்பும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அல் ஹிந்த் மருத்துவமனைக்கு செல்ல முற்படும்போது, கடுமையான தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வன்முறையால் காயமடைந்தவர்கள் உரிய சிகிச்சை பெற தடுக்கப்படும் கொடூரம் தொடரக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
டெல்லி அரசாங்கத்தின் கூடுதல் நிலை ஆலோசகர் சஞ்சோய் கோஸ் தரப்பில், “ காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தனர்.
டெல்லி காவல்துறை தரப்பில், ”காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் ஏதேனும் இருந்தால் விரைவில் மீட்கப்படுவார்கள் ”என்றும் டெல்லி காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து முஸ்தபாபாத்தின் அல் ஹிந்த் மருத்துவமனையில் இருந்து காயமடைந்தவர்களை உடனடியாக பாதுகாப்போடு வெளியேற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இன்று (பிப்ரவரி 26) மதிய உணவுக்குப் பின்னர் இந்த வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்கள்..
�,