Jசுத்தமான காற்றின் விலை ரூ.299!

Published On:

| By Balaji

தேசத்தின் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸி ப்யூர் என்ற பார் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தூய்மையான காற்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

*நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்/ கலந்த மயக்கம் உலகம்* என்கிறது தொல்காப்பியம். ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் என ஐம்பூதங்களின் சேர்க்கையினால் ஆன மயக்கமே இந்த உலகம் என்பது இதன் பொருள். இயற்கை அன்னை மனிதன் உட்பட சகல உயிரினங்களுக்கும் வழங்கிய இந்த அற்புதத்தை மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சிதைத்து வருகின்றான்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு என அனைத்தும் விற்பனைப் பொருளானது. மணல் கொள்ளை பற்றி கேட்கவே வேண்டாம். இயந்திரங்கள், தொழிற்சாலைகள் வந்த பின்பு அறிவியல் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என ஒரு பக்கம் மனிதன் முன்னேற்றப் படிகளில் ஏறினாலும், மறுபக்கம் இயற்கை சீரழிவுப் பாதையின் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் போல, தற்போது காற்றும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரத்துவங்கியிருக்கிறது.

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். காற்று மோசமடைந்து வருவதற்கு, பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு, அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பது ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இந்தியக் காற்று தரக் குறியீட்டின்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது, 51-100 புள்ளிகள் வரை இருந்தால் திருப்தி/மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது, 201-300 புள்ளிகள் இருந்தால் மோசம், 301-400 வரை இருந்தால் மிக மோசம், 401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம், 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகமிகத் தீவிரம் அல்லது நெருக்கடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில், காற்று மாசு 542 என்ற அளவில் மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் சுவாசிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காற்று மாசு மிகத்தீவிரமான நிலையிலேயே இருந்து வருகின்றது. இன்றைக்கு காலையும், காற்றின் தரம் 489 முதல் 500 வரை என்ற அளவைக் காட்டியிருக்கிறது.

இந்நிலையில், ஆக்ஸி ப்யூர் என்ற பார் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தூய்மையான காற்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆக்ஸி ப்யூர் ‘தனது வாடிக்கையாளர்களுக்கு ஏழு வெவ்வேறு நறுமணங்களில் (எலுமிச்சை, ஆரஞ்சு, இலவங்கப்பட்டை, ஸ்பியர்மிண்ட், மிளகுக்கீரை, யூகலிப்டஸ், மற்றும் லாவெண்டர்) தூய ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது.

காற்றை சுத்தம் செய்யும் Oxygen Concentrator இதில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் வாடிக்கையாளர்கள், 90 சதவீதம் வரை சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் எனவும் இந்த ஆக்ஸிஜன் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் 15 நிமிடங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆக்ஸிஜன் பாருக்கு டெல்லியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இரண்டாவது விற்பனை நிலையம் விரைவில் டெல்லி விமான நிலையத்தில் 2019 டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

அதே சமயம், சமூக வலைதளங்களில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். “பணக்காரர்களுக்கு எலுமிச்சை ஆக்ஸிஜன், மற்றவர்களுக்கு?”, “சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏழைகளை தான் மிகக் கடுமையாக பாதிக்கின்றன. அவர்களுக்கான காற்று சுத்திகரிப்பு தீர்வுகளை யார் வழங்குவார்கள்?” எனக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share