மாணவர்கள் மட்டுமே பயிலும் சைனிக் பள்ளிகளில் இனி மாணவிகளும் சேரலாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
2021-22ஆம் ஆண்டு கல்வி அமர்வில் இருந்து நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று(அக்டோபர் 18) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராணுவப் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளையும் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்துள்ளார். பாலினச் சமத்துவத்தை ஊக்குவிக்கவும் ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்தவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி தொடங்கிவைத்த பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம் திட்டத்தை இது வலிமையாக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் வசதிக்கேற்றவாறு ஆசிரியர்கள், தங்கும் விடுதி, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளை விரைந்து முடிக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
1961ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனனால் நாடு முழுவதிலும் சைனிக் ஸ்கூல் என அழைக்கப்படும் ராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 26 சைனிக் பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், உடுமலைப்பேட்டையில் அமராவதி அணைக்கு அருகே அமராவதி நகர் சைனிக் பள்ளி இயங்கி வருகின்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப்பள்ளிகளில் சிபிஎஸ்இ முறையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தங்கி பயிலும் வசதி கொண்ட இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, ஒரு காலத்தில் ஆண்களின் களமாக இருந்து வந்தது. தற்போது பெண்களுக்கான முன்னுரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருவது ஆரோக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் தற்போது ஆண்களுக்கு இணையான பதவிகளில் பெண் அதிகாரிகளும் பணியாற்றி வரும் சூழலில், சைனிக் பள்ளிகளில் மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், சோதனை அடிப்படையில் மிசோரம், லக்னோவில் இயங்கிவரும் சைனிக் பள்ளிகளில் குழந்தைகளை கடந்த 2017ஆம் ஆண்டு சேர்த்தது. எவ்விதப் பிரச்சனையும் இன்றி அம்மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து சைனிக் பள்ளிகளிலும் இனி பிளஸ் 2 வரை பெண் குழந்தைகள் பயில அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
�,”