குறைந்து வரும் வீராணம், வைகை நீர்மட்டம்: குடிநீர் பாதிக்கும் அபாயம்!

Published On:

| By Balaji

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்குக் குடிநீர் அனுப்பும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும், வைகை அணையின் நீர்மட்டமும் குறைந்து வருவதால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் தெரிகிறது.

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். பருவமழை காரணமாகத் தொடர்ந்து முழு கொள்ளளவில் ஏரி காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.

நேற்றைய (பிப்ரவரி 28) நிலவரப்படி 41.27 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும் சென்னைக்கு விநாடிக்கு 55 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் மதகு மூலம் விநாடிக்கு 96 கன அடி தண்ணீரும், வீராணம் ஏரி பாசனத்துக்கு விநாடிக்கு 39 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து என்பது இல்லை.

இந்த நிலையில் ஏரியில் 39 அடி வரைக்கும் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முடியும். இதே நிலை நீடித்தால் எதிர்வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி அனுப்ப முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இன்னும் இரண்டு மாதங்களுக்குத்தான் சென்னைக்குக் குடிநீர் அனுப்ப முடியும்” என்று தெரிவித்தனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழுக்கொள்ளளவை எட்டியது.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு கால்வாய் வழியாகவும், ஆற்று வழியாகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும் அணைக்கு நீர்வரத்து இருந்ததால் நீர்மட்டம் 17 நாட்களுக்கும் மேலாக முழுக்கொள்ளளவில் நீடித்தது.

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது அடியோடு நின்றுவிட்டது.

நீர்வரத்து இல்லாத நிலையில் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 620 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று (பிப்ரவரி 28) காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.52 அடியாக இருந்தது. இதனிடையே, “வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை” என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share