மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதைப் போல, தமிழக அரசும் 5 சதவிகித அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நேற்று (அக்டோபர் 17) காலை வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தியாவில் அரசு வேலைகளில் இருக்கும் அனைவருக்கும் பொருளாதார விலைவாசி ஏற்ற, இறக்க அடிப்படையில், புள்ளியியல் கணக்கீட்டின்படி ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்தவுடன் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்குவது வழக்கம். அதன்படி, தீபாவளி நெருங்குவதால் 5 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், ‘மத்திய அரசைப் போலவே, தமிழக அரசும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 12 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நிதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு 1-01-2019 அன்று முதல் அடிப்படை ஊதியத்தில் 12 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக உயர்த்தி ஜூலை 1 முதல் அதை அளிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 12 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படியான 5 சதவிகிதம் ஜூலை 1ஆம் தேதியை அடிப்படையாக வைத்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான தொகை உடனடியாக பணமில்லாப் பரிவர்த்தனை முறையில் இசிஎஸ் முறையில் உடனடியாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு ஏற்கெனவே அகவிலைப்படி பெறும் அனைத்து முழு நேர ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பகுதிநேர ஊழியர்களுக்கு இது பொருந்தாது.”
இவ்வாறு நிதித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.�,