தவறுக்கு துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளிதான்!

Published On:

| By Balaji

ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி பிரமுகரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து விமர்சனம் செய்து அவதூறான கருத்துகளைப் பேசியிருந்தார். அதனை யூடியூப் தளத்திலும் வெளியிட்டார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், இதுபோன்ற சம்பவங்களில் மனுதாரர் மீண்டும் ஈடுபட்டால் உடனடியாக ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும் துரைமுருகன், இனி முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக அவதூறு பரப்ப மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளாமல் தொடர்ந்து அவர் அவதூறு கருத்துகளை பேசி யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், இதனால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 20) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று குற்றவாளிகள் பலர் வாக்குமூலம் தருகின்றனர். அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது?

யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளை தடை செய்யலாமே?

வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? யூடியூப்பில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிய நீதிபதி, இது குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share