iலத்திக்கு பதில் கத்தி: தர்பார் ரகசியம்!

Published On:

| By Balaji

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி வைத்திருக்கும் வில்லன் கும்பல்களுக்கு மத்தியில் வாள் வைத்திருக்கும் காவல் துறை உயர் அதிகாரியாக ரஜினிகாந்த் தோன்றுகிறார். எதிரிகளை ரத்தம் சொட்ட சொட்ட குத்திக் கிழித்துவிட்டு, சேரில் அமரும் போது தோன்றும் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ எனும் பெயர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாசலம்.

பொதுவாகவே காவல்துறை அதிகாரிகள் கைகளில் லத்தியோடு தான் இருப்பர். ஆனால், தர்பாரில் ரஜினிகாந்த் கத்தியோடு வலம் வருவது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாபா படத்தில் ரஜினி கையில் வைத்திருக்கும் கத்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ‘பாபா’ கத்தி என்றே அழைக்கப்பட்ட அதனைத் தொடர்ந்து, தர்பாரில் ரஜினிகாந்த் கையில் வைத்திருக்கும் கத்தியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மும்பையில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கும் தர்பார் கதைக்களத்தில், பல அதிரடி காட்சிகளும் எமோஷனல் காட்சிகளும் இடம்பெறும் என ரசிகர்கள் ஆருடம் கூறிவர, அதற்கேற்றார் போல ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்து வந்திருக்கிறது தர்பார் மோஷன் போஸ்டர். அனிருத்தின் தீம் மியூசிக்கும் இதில் இடம்பெற்றிருக்கிறது. பேட்ட திரைப்படத்தை இது நியாயப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது மட்டும் ‘மைனஸ்’.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது 167ஆவது திரைப்படமான ’தர்பார்’ படத்தில் ஒப்பந்தமானார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக இப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்தார். ரஜினியின் 2.0 திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தர்பார் படத்தையும் தயாரிக்கிறது.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகிவரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு படக்குழு அறிவித்தபடி வெளியானது. தமிழில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார். அதே போல, மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ் பாபு, இந்தியில் சல்மான் கான் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share