}தடுப்பூசி போடாதவர்களால் ஆபத்து: ஆய்வில் தகவல்

Published On:

| By admin

கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் இணைந்து செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஒருவருக்கொருவருடனும், தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்ட குழுவினருடனும் இணைந்து பழக விட்டனர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை கனடா மருத்துவ சங்க பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிநபர் விருப்பம் என்று பலர் கூறுகிறார்கள் ஆனால், தடுப்பூசி போடுவதை கைவிட்ட நபர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்தது. தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் நெருங்கி பழகும் போது தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பரவுகிறது. தடுப்பூசி போட்டவர்கள் சதவீதம் அதிகமாக இருந்த போதிலும் இந்த அபாயம் நிலவுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “இது எதிர்கால கொரோனா அலைகளுக்கும், புதிய உருமாறிய கொரோனாக்களுக்கும் பொருந்தும். சுருக்கமாக சொன்னால், தடுப்பூசி போடாதவர்களால் அவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தனிநபர் விருப்பம் என்று வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை.” என்று டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போடுவது தனிநபர் விருப்பம் என்று கூறி தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருப்பது அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து என்று புரிந்து கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக நமது கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share