இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இன்று (நவம்பர் 28) மாலை இந்தியாவுக்கு வருகிறார். இந்த நிலையில் கோத்தயப ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகத்தான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் ஏராளமான மதிமுகவினர் இன்று (நவம்பர் 28) டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
கோத்தபய ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட ஏராளமான மதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கைதாகினர்.
ஆர்பாட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய வைகோ, “
இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி. அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தார். ஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார். இது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும்” என்றவர் கோத்தபய அதிபராக பதவியேற்ற பிறகு நடந்தவை பற்றியும் பட்டியலிட்டார்.
“தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய, பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்திருக்கிறார். கோத்தபய நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார். கோத்தபய அதிபரான பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபயவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. கோத்தபயவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
லைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர். ஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது” என்று பேசினார் வைகோ.
“எங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். எனவே ஐநா மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, உலகமெங்கும் ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று முடித்தார் வைகோ.
ஆர்பாட்டத்தின் போதே வைகோவும் மதிமுகவினரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷே மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் புத்தகயாவுக்கு வருவதை எதிர்த்து வைகோ உள்ளிட்டோர் போராடி ஜபல்பூர் அருகே கைதாகினர். இப்போது மகிந்தவின் தம்பி கோத்தபயவின் வருகையை எதிர்த்து டெல்லியில் போராடி கைதாகியிருக்கிறார்கள்.
�,