அப்பா இந்த உலகத்தை மாற்றிவிட்டார் – ஜார்ஜ் ஃபிளாயிடின் மகள்

Published On:

| By Balaji

அமெரிக்காவின் மினியபோலிஸ் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிடின் மகள் ஜியானாவின் சிறிய வீடியோ ஒன்று, ஜார்ஜின் நண்பரான விளையாட்டு வீரர் ஸ்டீபன் ஜாக்சன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது, ”அப்பா இந்த உலகத்தை மாற்றி விட்டார்” என்று அந்த வீடியோவில் ஜியானா கூறும் பதிவு உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.

ஜாக்சனின் தோள்களின் மேல் ஏறி அமர்ந்திருக்கும் ஜியானா மினியபோலிசின் தெருக்களில் நின்றது போல் அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் ஜாக்சன்

”நீ கூறுவது சரிதான் ஜிஜி, அப்பா உலகத்தை மாற்றி விட்டார். ஜார்ஜ் ஃபிளாயிட் மாற்றத்திற்கான பெயர் .அனைவர் மீதும் அன்பு செலுத்தும் அனைவருக்கும் எனது அன்புகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலராலும் விரும்பப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஜார்ஜ் ஃபிளாயிட் குடும்பத்தினரின் செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பில் ஜார்ஜின் மரணத்திற்கு நீதி வேண்டும் அவர் மிகவும் நல்லவராக வாழ்ந்தார் என்று ஜியானாவின் தாயார் ரோக்ஸி வாஷிங்டன் தெரிவித்திருந்தார்.

ஜார்ஜ் கொலையை தொடர்ந்து அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் போராட்டங்கள் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜை கொலை செய்த காவல்துறை அதிகாரி டெரெக் மேல் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று காவல் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

** – பவித்ரா குமரேசன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share