கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 8 நாட்களில் 16 பேரணிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஏப்ரல் 17) தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவருகின்றன. காங்கிரஸ், பாஜக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் 6 கட்டப் பயணத்தை சமீபத்தில் நிறைவு செய்தார்.
அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு தடவை 224 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார். பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கவுள்ளார். மொத்தம் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவர் 16 பேரணிகளில் கலந்துகொள்ளவுள்ளார். தனது முதல் பேரணியை தெற்கு கர்நாடகாவின் கோலார் பகுதியிலும் அடுத்த பேரணியை ராய்ச்சூர் பகுதியிலும் அவர் நடத்தவுள்ளார்.
பெல்லாரி, பெல்லாகவி பகுதிகளில் மே 1ஆம் தேதியும் சாம்ராஜ்நகர், உடுப்பி போன்ற பகுதிகளில் மே 3ஆம் தேதியும் அவரது பேரணி நடைபெறவுள்ளது. மே 5ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ளும் அவர், மங்களூரு, கலபுர்கி போன்ற பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். வேறு எந்தெந்த நகரங்களுக்குப் பிரதமர் மோடியை அழைத்துச் செல்வது என்பது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட உள்ளது.�,