dவைகுண்டராஜன் சீட் கேட்பது யாருக்காக?

Published On:

| By Balaji

நெல்லை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ் வைகுண்டராஜனின் மகன் திமுக சார்பில் போட்டியிடுகிறாரா என்பது பற்றிய தகவல்களோடு மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இது தொடர்பான மேலும் சில தகவல்களும் கிடைத்திருக்கின்றன.

“விவி மினரல்ஸ் வைகுண்டராஜனின் மகன்கள் சுப்பிரமணியன், வேல்முருகன் ஆகிய இருவரில் ஒருவர் திமுக சார்பில் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அண்ணாச்சி தனது நண்பரான எஸ்.டி.கே. ராஜன் என்பவருக்காகவே சீட் கேட்கிறார். அவருக்காகவே அண்ணாச்சியின் மகன்களில் ஒருவர் திமுகவின் மாவட்ட முக்கியஸ்தரை சந்தித்திருக்கக் கூடும். தவிர, அண்ணாச்சியின் நண்பர் நெல்லை டயோசிஷனில் முக்கியமான நபர்.அந்த வகையில் அவருக்கு சீட் கேட்கிறார் அண்ணாச்சி. அவருக்கு சீட் கொடுக்கப்பட்டால், நெல்லை தொகுதிக்கும் வேறு சில தொகுதிகளுக்கும் தேர்தல் செலவு பண்ணவும் தயாராக இருக்கிறார் என்றும் தகவல்” என்கிறார்கள் வைகுண்டராஜன் வட்டாரத்தில்.

எஸ்.டி.கே.ராஜன் பற்றி விசாரித்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் வெள்ளரிக்காய் ஏற்றுமதி தொழில் செய்பவர் என்றும் சொல்கிறார்கள். பல ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கு நெருக்கமான நண்பராக இருக்கும் எஸ்.டி.கே. ராஜனுக்கு சீட் கேட்பதற்கு இன்னொரு அரசியல் காரணமும் சொல்கிறார்கள்.

“நெல்லை தொகுதி காங்கிரஸுக்கு கொடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு திமுக கூட்டணியில் நிலவியது. பீட்டர் அல்போன்ஸ் நெல்லையைக் கேட்டு ஸ்டாலினிடம் சில மாதங்களுக்கு முன்னே அச்சாரம் போட்டு வைத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். அதேநேரம் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனின் மகள் சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்து தன் தந்தைக்கு சீட் கேட்டிருக்கிறார். இதை அறிந்த வைகுண்டராஜன் நெல்லை தொகுதியில் ஆதித்தன் போட்டியிட்டு வென்றுவிட்டால் தனக்கு இடைஞ்சலாக இருப்பார் என்று கருதினாராம். அதனால்தான் தனது நண்பர் எஸ்.டி.கே.ராஜனுக்கு சீட் கேட்டு திமுகவில் காய் நகர்த்தியிருக்கிறார். அப்படி தனது நண்பருக்குக் கிடைத்தால் நெல்லை தவிர திமுக தலைமை சொல்லும் வேறு சில தொகுதிகளின் செலவுகளையும் ஏற்பதாக கூறியிருக்கிறாராம் வைகுண்டராஜன்” என்கிறார்கள் நெல்லை அரசியல் வட்டாரத்தில்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share