�
இந்தியாவில் ஆயுஷ் மருத்துவத் துறையில் விரைவில் வேலைவாய்ப்பு பெருகவுள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
ஆயுஷ் என்பது ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் பிரிவுகளைக் குறிக்கும். ஆயுஷ் துறைக்கான ’சர்வதேச மாநாடு ஆரோக்யா-2017’, டெல்லியில் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்தியாவில் வளர்ந்து வரும் ஆயுஷ் துறையில் 2020ஆம் ஆண்டிற்குள் நேரடி வேலைவாய்ப்பின் மூலம் 10 லட்சம் பேரும், மறைமுக வேலைவாய்ப்பின் மூலம் 2.5 கோடி பேரும் பயனடைய உள்ளனர். ஆயுஷ் துறைக்கான இந்திய உள்ளூர் மதிப்பு சுமார் ரூ.500 கோடியாகவும், ஏற்றுமதி மதிப்பு ரூ.200 கோடியாகவும் உள்ளது. இதனால் இளம் தொழில் முனைவோருக்கு இந்தத் துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
மேலும் மத்திய அரசு ஆயுஷ் துறையின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை 100 சதவிகிதம் வரவேற்கிறது. இந்தியா ஆயுஷ் துறையில் 6,600 மருத்துவ உற்பத்தி நிலையங்களைக் கொண்டு உலகிலேயே ஆயுஷ் மற்றும் மூலிகை பொருட்களின் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது” என்று பேசினார்.�,”