தமிழகத்தின் வறட்சி பாதிப்பை இன்று ஆய்வு செய்கிறது மத்தியக் குழு. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வறட்சியால் 10,453 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் கருகி நாசமடைந்தன. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் வறட்சி பாதித்த மாநிலம் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து, வறட்சி பாதிப்புகள் குறித்த அறிக்கையை வழங்கி, நிவாரணத் தொகை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், வறட்சி பாதிப்பு குறித்து தஞ்சை பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு சென்ற மத்தியக் குழுவின் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் வசுதா மிஸ்ரா, மத்திய செலவினத்துறை மற்றும் நிதி அமைச்சகம் சார்பாக தீனாநாத், மத்திய மின்சாரத்துறை சார்பாக அமித் குமார் உள்ளிட்டோர் கோவில்பட்டு, புதுப்பட்டினம், மேலூர், சொக்கணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வறட்சி பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கமளித்தார். மத்திய குழுவினர் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இதில் ஏக்கருக்கு 25 ஆயிரம், தொழிளார்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, உயிரிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து நடப்பு ஆண்டில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தஞ்சையை அடுத்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு பார்வையிட உள்ளது..
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட உளுந்தை, முதுகூர் ஆகிய கிராமங்களில் சமூக பாதுகாப்பு ஆணையர் மகேஷ்வரன் தலைமையில், கணேஷ்ராம், ரத்தன் பிரசாத், பால் பாண்டியன் ஆகியோர் கொண்ட மத்திய அரசு குழுவினர் நேற்று வறட்சி பாதித்த நெற்பயிர்கள், நிலங்களைப் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மொத்தம் 6,114.9 ஹெக்டேர் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் மொத்தம் 4,338 ஹெக்டேர் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 5,561 சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.�,