வன வளங்களைப் பாதுகாக்கவும், காட்டு விலங்குகளின் இடப்பெயர்ச்சியைக் கண்காணிக்கவும், வனத் துறை சார்பாக திருநெல்வேலி மாவட்ட வனப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை, குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய ஐந்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் 32 வன பீட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த வனப் பகுதியில் யானை, கரடி, புலி, எருமை மற்றும் பல்வேறு வன விலங்குள் வாழ்கின்றன. சந்தனம், தேக்கு, ஈட்டி முதலிய விலை உயர்ந்த மரங்களும் இங்குள்ள காடுகளில் உள்ளன.
இந்த நிலையில், மாவட்ட வனத்துக்குள் சட்ட விரோதமாக நுழையும் சமூக விரோத கும்பல்களின் நடமாட்டத்தைத் தடுக்கவும், வன விலங்குகளின் இடப்பெயர்ச்சியைக் கண்காணிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 15 வன பீட்களில், 150க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய பீட்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், இரண்டு சதுர கிலோமீட்டருக்கு இரண்டு கேமரா என்ற அடிப்படையில் இவை பொருத்தப்படும் என்றும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.�,