விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு பெற்றுள்ளது. அவர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் தயாராகிவரும் நிலையில் அஞ்சலியுடன் அவர் இணைந்து நடிக்கும் சிந்துபாத் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் அருண் குமார் இயக்கும் மூன்றாவது படமான சிந்துபாத்திலும் நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. கதாநாயகியாக அஞ்சலியும், விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் படத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் சார்பாக எஸ்.என்.ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரிக்கின்றனர்.
இன்று படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் சிந்துபாத் திரைப்படம் வரும் மே மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் மார்ச் 11ஆம் வெளியான இதன் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பு ரூபன், கலை ஏ.ஆர்.மோகன்.
மே மாதம், தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களின் படங்கள் வரிசையாக அணிவகுத்து வருகின்றன. சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் மே 1ஆம் தேதியும், விஷால் நடிக்கும் அயோக்யா மற்றும் ஜெய் நடிக்கும் நீயா 2 மே 10ஆம் தேதியும், சூர்யா நடிக்கும் என்ஜிகே மே 31ஆம் தேதியும், விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் மே மாத இறுதியிலும் வெளிவரவுள்ளன. இதனால் திரையரங்குகளை கைப்பற்ற பெரும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
�,”