வருகிற 2026ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் மின் உற்பத்தித் துறையில் பிரதான மூலமாக நிலக்கரி திகழும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிட்ச் குழுமத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஐ. நிறுவனம் இந்தியாவின் மின் உற்பத்தி குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் பிரதானத் தேர்வாக நிலக்கரி திகழும். மின்மயமாக்கும் திட்டம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் போன்ற காரணிகளால் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின் உற்பத்தித் துறை மேலும் விரிவடையும். வருகிற 2026ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் மின் உற்பத்தித் துறையில் நிலக்கரியின் பங்கு 68 சதவிகிதமாக இருக்கும். கடந்த 2015ஆம் ஆண்டு முதலே சுரங்க வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருவதால் நிலக்கரி பயன்பாடு அதிகரித்து வருகிறது.
எனினும், சுரங்க ஏலங்களில் தாமத நிலை நீடிப்பது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்தபடி, நடைமுறையில் உள்ள 120 சுரங்கத் திட்டங்களில் 62 நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் தாமதமாகியுள்ளன. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாகியுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. தற்போதைய நிலையில் மின் உற்பத்தித் துறையில் நீர் மின் உற்பத்தியின் பங்கு 9 சதவிகிதமாக உள்ளது. அது வருகிற 2026ஆம் ஆண்டு வாக்கில் 7 சதவிகிதமாகக் குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் நீர் மின் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 3.8 என்ற சிறிய அளவிலேயே உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,