dமாவட்டமாகும் செங்கல்பட்டு, தென்காசி!

Published On:

| By Balaji

செங்கல்பட்டு, தென்காசி ஆகியவை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 18) 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தற்போது பெரிய மாவட்டங்களாக உள்ள திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன்படி, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்படுவர்” என்று கூறினார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கடந்த 1998 முதல் கோரிக்கை வைத்து வந்தது. தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதியை மேம்படுத்த தென்காசி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வாக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். அதுபோலவே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமி, மதிமுக சதன் திருமலைக்குமார், திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை, சமக ஆர்.சரத்குமார் உள்ளிட்டோரும் தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டுமென சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியாக அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

ஜூலை 6ஆம் தேதி இதுதொடர்பாக தென்காசியில் பேசிய முதல்வர், “நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலிக்கப்படும்” என உறுதியளித்திருந்தார். இதுதொடர்பாக [எடப்பாடியாரே பரிசீலனைக்கு நேரமில்லை](https://minnambalam.com/k/2019/07/07/46) என்ற தலைப்பில் தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்குவதில் உள்ள சிக்கல்களையும் அதனை எவ்வாறு களையலாம் என்பது குறித்து குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு, தென்காசியுடன் கும்பகோணமும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று உறுதியளித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share