ஓகி புயல் பாதிப்பைப் பார்வையிட வந்த மத்திய ஆய்வுக்குழுத் தலைவருக்கு திமுக செயல்தலைவர் எழுதிய கடிதத்தை, நேற்று (டிசம்பர் 28) குமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வழங்கினர்.
ஓகி புயல் பாதிப்பைப் பார்வையிட வந்த மத்தியக் குழுவினர், நேற்று (டிசம்பர் 28) இரண்டாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உள்துறை இணைச்செயலர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் தலைமையிலான மத்தியக் குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, தமிழக வருவாய்த் துறை செயலர், வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தினர். புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைப் பார்வையிட்டனர். அதன்பின், வடசென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நிகழ்ந்த ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று பார்த்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி பிபின் மாலிக் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழுவின் இன்னொரு பிரிவு, தூத்தூர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மீனவக் கிராமங்களுக்கு நேரில் சென்றனர். அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்கள் சந்தித்த துன்பங்களைக் கேட்டறிந்தனர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, ஆட்சியர் சஜ்ஜன் சிங் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது மத்தியக் குழு. அதன் பிறகு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சுரேஷ்ராஜன், பிரின்ஸ், மனோ தங்கராஜ் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்கள் மத்தியக் குழுவினரைச் சந்தித்தனர். அப்போது, ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்தியக் குழு தலைவருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் அவர்களிடம் அளிக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்றும், விரைவில் நிவாரண நிதியை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
“மீனவர்கள், விவசாயிகள் என்று பாரபட்சம் பாராமல் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்து, சேதத்துக்குத் தகுந்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும். மீன்வலை சேதமுற்றவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை தர வேண்டும். ஓகி புயலால் காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியக் குழுவினர் இன்றும் ஆய்வைத் தொடரவுள்ளனர் என்றும் அதன்பின்னர் இரு குழுக்களும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.�,