மதுரையில் நியாயமாகத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லாத சூழல் நிலவுவதால், அம்மாவட்டத்தில் தேர்தலை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக மதுரையில் சுயேச்சை வேட்பாளராக கே.கே.ரமேஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் கே.கே.ரமேஷ் மதுரையில் தேர்தலை நிறுத்தக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ’கடந்த மார்ச் 31ஆம் தேதி சவுராஷ்டிரா இன மக்களுடன் அதிமுக கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு இனிப்பு வகைகள் மற்றும் உணவு வழங்கியதுடன் ஒருவருக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் மீறலுக்கு எதிரான இந்த செயல் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதுரையில் தற்போது நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் சூழல் இல்லாததால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவினர் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்களிலேயே பணத்தைக் கொடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கே.கே. ராமேஷ் மதுரையில் பணம் தாராளமாகப் புழங்குகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 10) மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.�,