dபோராட்டம் தற்காலிக வாபஸ்: நாராயணசாமி

Published On:

| By Balaji

ஆளுநர் கிரண் பேடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, தர்ணா போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு அனுப்பிய கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் தரவில்லை என்று கூறி, 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் எதிரில் தொடர் போராட்டத்தை நடத்தினார். நாராயணசாமியின் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

போராட்டம் நேற்று (பிப்ரவரி 18) ஆறாவது நாளை எட்டிய நிலையில், முதல்வர் நாராயணசாமியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார் கிரண் பேடி. அதன்படி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி வாக்கில் பேச்சுவார்த்தைத் தொடங்கியது. அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஷ்வினிகுமார் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்களும் இதில் பங்கேற்றனர். சுமார் 4.30 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையானது இரவு 10 மணிக்கு முடிந்தது. பேச்சுவார்த்தையில், இலவச வேட்டி, சேலை வழங்குதல், இலவச அரிசி வழங்குதல், மின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ‘தர்ணாவைத் திரும்பப் பெறுவது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “பேச்சுவார்த்தையில் எங்களுடைய கோரிக்கைகளில் சிலவற்றை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பரிசீலனை செய்வதாகக் கூறினார். சில கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறினார். போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. தற்போது போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். மக்கள் மத்தியில் எங்களுடைய பிரச்சினைகளை முன்வைக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதன்மூலம் ஆளுநருக்கு எதிராக நாராயணசாமி நடத்திவந்த ஆறு நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share