இந்தியாவில் பொதுத் துறை வாகனங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஏடி கியர்னி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஆய்வொன்றை நடத்தியது. அதில், 1994ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் 60-80 சதவிகிதப் பயணிகள் பொதுத்துறை வாகனங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டின் இறுதியில் 25-35 சதவிகிதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவில்லை.
அதேசமயம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. கடந்த 10-15 ஆண்டுகளில் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர், லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், பொதுத் துறை வாகனப் பயன்பாட்டில் பின்னடைவே தொடர்ந்தது.
2014-2017ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 8-10 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பேருந்துகளின் பயன்பாடு சரிவிலிருந்து மீண்டும் வந்தது. இருப்பினும், பொதுத் துறை வாகனங்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.
இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு எளிதில் செல்ல துணை புரிகின்றன. டெல்லியில் பதிவு செய்யப்பட்ட 19 லட்சம் பேருந்துகளில் 1.4 லட்சம் மட்டுமே மாநிலப் போக்குவரத்துத் துறையால் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 90% பேருந்துகள் தனியார் அல்லது கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமானவை ஆகும்.
20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாற வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கக்கூடாது என டெல்லியைச் சேர்ந்த நகரப் போக்குவரத்துத் திட்ட அமைப்பாளர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.�,