dபேசாத அஜித்தை பேசவைக்கும் ரசிகர்கள்!

Published On:

| By Balaji

இராமானுஜம்

தமிழ் சினிமா 365: பகுதி – 21

தமிழ் சினிமா நடிகர்களில் பலர் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி சார்பு கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். அதனால் தங்களுக்கு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் கிடைக்கும் என்ற சுயநலம் தான் இதற்குக் காரணம். தொழில் ரீதியாக நெருக்கடி வந்தாலும் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்களும் உண்டு.

ஜெயலலிதாவின் அபிமானியாக, ஆதரவாளராக, அவரின் அடுத்த வாரிசாக தமிழக அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்பட்டவர் அஜித் குமார். விரைவில் அவருக்கு பட்டாபிஷேகம் நடைபெறக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது. இது ‘அஜித்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது; அதிமுக தலைவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது’ என்று அப்போது கூறப்பட்டது.

அஜித் குமார் ஷாலினியை திருமணம் செய்து கொண்ட பின் அவரது திரையுலக ஆஸ்தான தயாரிப்பாளரும் நண்பருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியுடனான நட்பு முடிவுக்கு வந்தது. பரபரப்பான பேட்டிகளை பத்திரிக்கைகளுக்கு கொடுப்பது, திரையுலக பிரச்சினைகளில் தயக்கமின்றி கருத்து சொல்லும் நடிகராக வலம் வந்த அஜித், திருமணத்துக்குப் பின் மெளன நடிகரானார். அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்கும் பழக்கமுள்ள அஜித் அவர்களை சந்திப்பதையும், பேட்டி கொடுப்பதையும் தவிர்க்கத் தொடங்கியவர் இன்று வரை அதனை கடைப்பிடித்து வருகிறார்.

தயாரிப்பாளர்களிடம் படங்களில் நடிக்க வருவது மட்டுமே எனது வேலை, அது சம்பந்தமான வேலைகளுக்கு மட்டுமே என்னை அழைக்க வேண்டும். பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளும் தயாரிப்பாளர்களுடன் மட்டும் இணைவதை கொள்கையாக கடைப்பிடித்து வருகிறார் அஜித் குமார்.

படம் முடிந்த பின் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு லாபமா, நஷ்டமா என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தப் போய்விடும் அஜித், விவேகம் படம் மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்த படம் தான் விஸ்வாசம். இப்படத்துடன் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கல் போட்டியில் களமிறங்குகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதல் மீடியாக்களில் தினந்தோறும் தவிர்க்க முடியாத நடிகரானார் அஜித்.

ஜனவரி 10 அன்று விஸ்வாசம் வெளியான பின் அப்படத்தின் வசூல் சம்பந்தமாக எண்ணற்ற சர்ச்சைகள் ஏற்பட்டது. அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்களை சமூக வலைதளங்களில் அநாகரிகமாகவும் திட்டி வந்தனர். இது சம்பந்தமாக பொறுப்பான குடிமகனாக, நடிகராக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், தனது ரசிகர்களை இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிக்கை வெளியிடவில்லை. சில தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைந்தது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ‘அஜித் ரசிகர்கள் நல்லவர்கள்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துப்பா பாடத் தொடங்கினார். அதிமுக – பிஜேபியுடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிற நிலையில் அஜித் ரசிகர்கள் என்ற பேனருடன், சிலர் பிஜேபியில் இணைந்தது அரசியல் முக்கியத்துவமாக மாறியது. இந்தச் சூழ்நிலையில் நேற்று மாலை அவசரமாக அஜீத் குமார் கையெழுத்திட்ட அறிக்கையொன்றை மீடியாக்களுக்கு தனது பத்திரிகை தொடர்பாளர் மூலம் அனுப்பினார். அதில் “நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்தியிருக்கிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டையும் நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்றுப் பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ள அறிக்கையை அஜித் குமார் வெளியிட வேண்டிய அவசரம், அவசியம் ஏன் ஏற்பட்டது பற்றி மாலை 7 மணி பதிப்பில்…

**முந்தைய பகுதி : [அஜித் – ரஜினி: ஒப்பீடு சரியானதா?](https://minnambalam.com/k/2019/01/21/41)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share