தற்போதைய குடியரசுத் தலைவர் பதவி காலத்தில் இறுதி பயணமாகக் கொல்கத்தா சென்றுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 69.3 சதவிகித வாக்குகள் பெற்று பதினான்காவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜூலை 17ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் சார்பில் மீரா குமாரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் இருவருமே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜி நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் நடைபெற்ற பி.சி.மஹாலானோபிஸ் அவர்களின் 125ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில், பேசிய பிரணாப் முகர்ஜி, “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஜனாதிபதி பதவிக்காலத்தில் கடைசி பயணமாக கொல்கத்தா வந்துள்ளேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி அம்மாநில அரசியலில் கோலோச்சிய பின்னர்தான் தேசிய அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,