Z‘சேது’ திரைப்படத்தைத் தான் தவறவிட்டதாக விஷயம் தெரியாதவர்கள் பேசுகிறார்கள் என்று நடிகர் விக்னேஷ் கூறியுள்ளார்.
‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். பசும்பொன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஆருத்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது அவரிடம் இயக்குநர் பாலாவின் சேது படத்தை தவறவிட்டதற்காக வருந்துகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “பாலா இயக்கத்தில் சேது படத்தை தவறவிட்டதாக, விஷயம் தெரியாதவர்கள் பேசுகிறார்கள். ஆனால், நடந்தது வேறு. பாலாவின் சேது படத்தை நான் தவிர்க்கவில்லை. முதன்முதலில் சேது திரைப்படம் என்னை வைத்துதான் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் பிரச்சினை காரணமாகப் படம் தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது. அதன் பிறகு தோல்வியைத் தாங்கி கொள்ள முடியாமல் பாலா தன்னுடைய விலாசத்தை மாற்றி சென்று விட்டார்.
இரண்டு வருடங்கள் கழித்துதான் இயக்குநர் பாலா சேது படத்தை விக்ரமை வைத்து இயக்கி, அதனுடைய அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார். நான் கேட்டதற்கு ‘நீங்கள் பிசியாக இருந்தீர்கள். அதனால்தான் நான் வேறு நடிகரைத் தேர்வு செய்யும் கட்டாயம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதுதான் நடந்த உண்மை” என்றார்.
இயக்குநர் பாலாவும் நடிகர் விக்னேஷும் அறைத்தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.�,