தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரக் கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்றிரவு (பிப்ரவரி 14) டெல்லியிலிருந்து வருகை தந்த மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
3மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வாக்கில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் முடிவேதும் எட்டப்படாததால், சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார் பியூஷ் கோயல். பியூஷ் கோயலை வழியனுப்பிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளோம், நல்ல முறையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது அனைவருக்கும் திருப்திகரமாக இருந்தது, மேலும் தொடரும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “இரு தரப்புக்கும் பொது இடமான பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றதாகத்தான் மீடியாக்களில் செய்தி வெளியானது. உண்மையில் இரவு 9.30 மணிக்கே அந்த வீட்டுக்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் சென்று பியூஷ் கோயலுக்காக காத்திருந்தார்கள். பியூஷ் கோயல் வந்தபிறகு தங்கமணி, வேலுமணி இருவரும் உள்ளே சென்றதால், அவர்கள் மட்டும் கலந்துகொண்டதாக மீடியாக்களும் கூறின. பேச்சுவார்த்தை முடிந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்றபிறகுதான் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்றால் கட்சி அலுவலகங்களில்தான் நடைபெறும். இது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முன்னர் நடப்பதால், இருவரும் தாங்கள் கலந்துகொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனால்தான் இன்று காலை இவர்கள் இருவரையும் சந்திக்க இருந்த பியூஷ் கோயல், நள்ளிரவே புறப்பட்டு டெல்லி சென்றார்” என்று முடித்தார்கள்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தால், சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பும் நிலையில், கூட்டணி தொடர்பாக அவரை சந்திக்க இன்னும் சில நாட்களில் சென்னை வருகிறார் பியூஷ் கோயல். அப்போது எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் சந்திக்கலாம் என்றும், அந்த சமயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வரலாம் என்றும் நம்பிக்கையாகக் கூறுகிறார்கள்.�,