நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுதும் எதிர்பாராத கவனம் பெற்றிருப்பவை நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யம் கட்சியும்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்கு அறுவடையை நடத்தியிருக்கிறது. கோவை, தென் சென்னை, வடசென்னை உள்ளிட்ட தொகுதிகளில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கமல் ஹாசன்.
அதேபோல நாம் தமிழர் கட்சியும் தமிழகம் முழுக்க தனது தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு, ‘நாங்கள் பிணக் குவியல்களில் இருந்து எழுந்து வந்த பிள்ளைகள்; என்று சொல்லி கட்சி ஆரம்பித்த சீமான் 2011 தேர்தலில் திமுக-காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்துக் கடுமையான பரப்புரையில் இறங்கினார். நெல்லை உவரியில் தொடங்கி தமிழகம் முழுதும் சீமானின் வீரியமான பேச்சு திமுகவுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
அதற்குப் பின் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்று 1% சதவிகித ஓட்டுகளைப் பெற்ற சீமான், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 4% ஓட்டுகளைப் பெற்றிருக்கிறார். ஆண்கள் 20, பெண்கள் 20 என்று சரிசமமாக வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான்.
இவர்களில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய ஏழு தொகுதிகளில் நாம் தமிழர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு தொகுதிகளில் ஐம்பதாயிரம் ஓட்டுகளை அனாயாசமாகக் கடந்துள்ளது நாம் தமிழர்.
அரக்கோணம் -29, 065, ஆரணி 32,151, மத்திய சென்னை 30, 809, வடசென்னை 60 411, தென் சென்னை 50,156, சிதம்பரம் 37,329, கோவை 60, 391 என்று வாக்குகள் பெற்றுள்ள சீமானின் வேட்பாளர்கள் தமிழகம் முழுதும் மொத்தம் 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 ஆவது இடத்தில் இருந்த நாம் தமிழர் இப்போது நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
“கமல்ஹாசனுடன் எங்களை ஒப்பிடக் கூடாது. அவர் ட்விட்டரில் இருந்து அரசியலுக்கு வந்தவர். நாங்கள் போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தோம். சீமான் தேசியப் பாதுகாப்பு சட்டம் உட்பட பல வழக்குகளில் சிறை சென்றுள்ளார். முதலில் சீமான் என்றால் ஈழத் தமிழர் பிரச்சினை என்றே முத்திரை குத்தினர். ஆனால் நாங்கள் தமிழகத்தின் கிராமப் பொருளாதாரம், பண்பாட்டுச் சூழல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தெளிவான வரையறைகளைக் கொள்கையாக வைத்துள்ளோம். மக்கள் எங்களை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, அடித்து சொல்லுவோம். இந்த 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 வாக்குகளும் ஒரு பைசா கூட கொடுத்து வாங்கப்பட்டது அல்ல. எனவே தமிழகத்தில் மாற்றத்துக்கான களம் காத்துக் கிடக்கிறது” என்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள்.
�,